Sunday, December 13, 2015

நிலைமாற்றுகால நீதி: மலையக மக்கள் சார்பில் பாதிக்கப்பட்டோர் ஆலோசனை செயன்முறைக்கான பரிந்துரைகள்

நிலைமாற்று கால நீதி தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்தாலோசிக்கும் செயன்முறையில் மலையக மக்களும் உள்வாங்கப்பட்டு அவர்களது விடயங்களும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும் என்று மலையக சமூக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மலையக சமூக ஆய்வு மையம் வௌியிட்டுள்ள ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் கீழே காணலாம்.

நிலைமாற்று கால நீதி தொடர்பில் பாதிக்கப்பட்டோரை கலந்தாலோசிக்கும் செயன்முறையை எவ்வாறு வடிவமைக்க வேண்டும் என்பது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் இன, மத, மொழி, பால்நிலை, பிரதேசம் கடந்து ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் சமர்ப்பிக்குமாறு கேட்டிருந்தது. பாதிக்கப்பட்டோர் கலந்தாலோசனை செயற்பாடுகளை முன்னெடுக்கும் இணைப்புக் குழுவின் செயல் வடிவம் வெவ்வேறானதாக இருக்க வேண்டும் என்ற விடயம் தொடர்பில் மலையக மக்கள் சார்பில் மலையக சமூக ஆய்வு மையத்தின் பரிந்துரைகள் இதுவாகும்.

இலங்கையில் நிலைமாற்று கால நீதியை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்காக பாதிக்கப்பட்டோர் கலந்தாலோசனை செயன்முறையின்போது (Victim Consultation Process) இந்நாட்டின் குடிமக்கள் என்ற வகையில் மலையகத் தமிழ் மக்கள் சார்பாக பின்வரும் விடயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.
  1. பிரதிநிதித்துவம்
I பாதிக்கப்பட்டோர் கலந்தாலோசனை செயல்முறையினை முன்னெடுக்கும் இணைப்புக் குழுவில் மலையக சிவில் சமூக பிரதிநிதி ஒருவரும் உள்வாங்கப்படல் வேண்டும்.
II இக்குழுவில் 50% பிரதிநிதித்துவம் பெண்களைக் கொண்டதாக உறுதி செய்யப்படல் வேண்டும்.
  1. சாட்சிகளின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படல் வேண்டும்.
  2. இணைப்புக் குழுவின் விடய பரப்புக்குள் மலையகத் தமிழர்களின் பின்வரும் விடயங்கள் உள்வாங்கப்பட வேண்டும்.
I 1947ஆம் ஆண்டு இடம்பெற்ற மலையகத் தமிழரின் குடியுரிமை பறிப்பு.

II 1948ஆம் ஆண்டு இடம்பெற்ற மலையகத் தமிழரின் வாக்குரிமை பறிப்பு.

III 1964ஆம் ஆண்டு சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலமும், 1974ஆம் ஆண்டு சிறிமா – இந்திரா ஒப்பந்தம் மூலமும் இம்மக்களின் விருப்பத்திற்கு மாறாக கட்டாயத்தின் பேரில் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட விவகாரம்.

IV 1958ஆம் ஆண்டிலிருந்து 1983ஆம் ஆண்டு வரை மலையகப் பிரதேசங்களில் இடம்பெற்ற இன வன்முறைகளினால் ஏற்பட்ட பாதிப்புகள் (உயிர் மற்றும் சொத்துடமை) மற்றும் அதன் விளைவாக வட கிழக்குப் பிரதேசங்களில் குடியேறிய மலையகத் தமிழ் மக்களினுடைய உரிமைகள்.

V வடக்கு கிழக்கில் உள்நாட்டுப் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் அந்தப் போரின் விளைவாக மலையகத் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள். குறிப்பாக சந்தேகத்தின் பேரில் மலையகத் தமிழர்கள் கைதுசெய்யப்படல், தடுத்து வைத்தல், மனோ நீதியாக அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட பாதிப்புகள்/ வடுக்கள் போன்றவை.

VI 200 வருடகால வரலாற்றை இந்த நாட்டில் கொண்டுள்ள மலையகத் தமிழரின் காணியுரிமை அற்ற நிலையும், அவர்களின் வீட்டுரிமைப் பிரச்சினையும்.

VII அரசியல் யாப்பில் சம அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள தமிழ்மொழி மலையகப் பிரதேசங்களில் முறையாக அமுல்படுத்தப்படாமை.

VIII அன்று முதல் இன்று வரை மலையகத் தமிழர்கள் ஐதாக வாழும் மாவட்டங்களில்/ பிரதேசங்களில் மலையகத் தமிழரின் இனத்துவ அடையாளங்களுக்கு விடுக்கப்பட்டு வரும் அச்சுறுத்தல்கள் அல்லது இனத்துவ அடையாளங்களை அழித்தல் என்ற விவகாரம்.

IX மலையகத் தமிழர்கள் வாழும் பிரதேசங்களில், குறிப்பாக பெருந்தோட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டாய கருத்தடைகள்.

X திட்டமிட்ட குடியேற்றங்கள் மற்றும் பொருளாதார வளங்களை சூறையாடுதல் போன்ற வழிமுறை ஊடாக மலையகத் தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குறியாக்கியமை.
  1. இடம்
சாட்சியங்களை பதிவுசெய்வதற்கும், உண்மைகளை வெளிப்படுத்துவதற்குமான வாய்ப்பு இந்நாட்டில் ஏனைய சமூகங்களுக்கு வழங்கப்படுவது போன்று சமவாய்ப்பு மலையகத் தமிழருக்கும் வழங்கப்பட வேண்டும். இதற்காக இந்த இணைப்புக் குழுவின் (Coordinating Committee) விசாரணைகள் மலையகத்தில், குறிப்பாக நுவரெலியா, பதுளை, கண்டி, இரத்தினபுரி, தெனியாய போன்ற நகரங்களிலும் மீரியாபெத்தை பிரதேசத்திலும் இடம்பெறல் வேண்டும்.
  1. காலமும் அவதானிப்பும்
மக்களுக்கு உண்மைகளையும், சாட்சியங்களையும் வழங்குவதற்கு போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் செயற்பாடுகளை நிறைவுசெய்ய முடியாத பட்சத்தில் கால எல்லை நீடிக்கப்பட வேண்டும். குறுகிய கால எல்லைக்குள் நிறைவுசெய்ய வேண்டுமாயின் இணைப்புக் குழுவின் ஆளணி வலுவை அதற்கேற்ப அதிகரிக்கப்படல் வேண்டும்.

மக்களின் உண்மைகளையும், சாட்சியங்களையும் பதிவுசெய்யும் இடங்களுக்கு சர்வதேச அவதானிப்பாளர்களுக்கும், உள்நாட்டு அவதானிப்பாளர்களுக்கும் எவ்வித தடையுமின்றி அவதானிப்புகளை மேற்கொள்வதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.
  1. மொழி
உண்மைகளை கண்டறியும் போதும், சாட்சியங்களைப் பதிவு செய்யும்போதும் எந்தவொரு தனிநபரும் இன ரீதியாகவோ, மொழி ரீதியாகவோ, பால்நிலை அடிப்படையிலோ, மத ரீதியாகவோ வேறுபாடுகளுக்கு உட்படுத்தப்படக்கூடாது. பாதிக்கப்பட்டோர் அனைவருக்கும் தமது தாய் மொழியினை பயன்படுத்தி கருமங்களை ஆற்றுவதற்கு வசதி செய்து கொடுக்கப்படல் வேண்டும்.

மலையக சமூக ஆய்வு மையம்

நன்றி- மாற்றம் இணையம்

மலையகத் தமிழர்கள்; தொடர்ந்துவரும் மனித உரிமை மீறல்கள்

இலங்கையின் மலையகத் தமிழருக்கெதிரான மனித உரிமை மீறல்கள் இரண்டு நூற்றாண்டுகளாக இடம் பெற்றுவருகின்றன. இரண்டாம் உலகப் போரின் பின்னர் தோற்றுவிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையால் சர்வதேச மனித உரிமைகள் சமவாயம் பிரகடனப்படுத்தப்படும் முன்னரே மனித இனத்தின் பிறப்புரிமைகள் பறிக்கப்பட்ட மக்களினங்களில் ஒன்றாக மலையகத் தமிழர்கள் காணப்பட்டார்கள்.

இலங்கையின் சுதந்திரம் நோக்கிய பயணத்தில் ஆங்கில கல்விகற்ற மத்தியதர வர்க்கங்களும், தமிழ் சிங்கள பிரபுத்துவ வர்க்கங்களும் தமது அமைக்குடிகளாக மலையகத் தமிழர்களை கருதினார்களேயன்றி அம்மக்களினத்தின் அடிப்படை உரிமைகள், மனிதஉரிமைகள், ஜனநாயக உரிமைகள் பற்றி எண்ணிப்பார்க்கவும் தயங்கினர்.

1833களில் ஆரம்பமான காலனித்துவ கால அரசியலமைப்புச் சீர்திருத்த முயற்சிகள் படிப்படியாக முன்னோக்கிச் சென்று, 1947ஆம் ஆண்டில் சேர் வில்லியம் சோல்பரி யாப்பாக பரிணமித்ததுடன் தொடர்ந்த மலையகத் தமிழருக்கெதிரான நிகழ்வுப்போக்குகள், இன்றைவரை வெவ்வேறுபட்டு பரிமாணங்களை தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

மலையகத் தமிழர்களின் மனித உரிமைகளை மீறுவதில் சகல ஆளும் குழுமங்களும், வர்க்கங்களும், இனப்பிரிவுகளும், பிரபுத்துவ, முதலாளி சக்திகளும், வலதுசாரிகள், இடதுசாரிகள், சந்தர்ப்பவாதிகள், தமிழ் தேசியவாதிகள் அனைவரும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்ற விசித்திரத்தை இலங்கை தீவில் மட்டும் காணமுடிகின்றது.

1931ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் மலையகத் தமிழர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது. இன்றுவரையும் உள்ளூராட்சி மன்றங்கள், மலையகத் தமிழருக்கு தோட்டத் தொழிலாளருக்கு எத்தகைய சேவையும் செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. அதனை மீறி சேவை செய்த மத்திய மாகாணத்தின், கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள உடப்பளாத்தை பிரதேசசபை, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்க நாயக்கவால் கலைக்கப்பட்டது.

இலங்கைத்தீவின் 275,000 மக்கள் தொகை கொண்ட நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலகமே இலங்கையில் ஆகப்பெரியதாகும். இது மஹரகம பிரதேச செயலகத்தோடு ஒப்பிடுகையில் 30 பிரதேச செயலகங்களை கொண்டிருக்க வேண்டிய பிரதேசமாகும். அதேபோல இலங்கையில் 425 பேருக்கு ஒரு கிராம சேவையாளர் பிரிவு காணப்படும் போது நுவரெலியா மாவட்டத்தில் 9500 பேர் வசிக்கும் கெர்க்கஸ்வோல்ட் பகுதியில் ஒரு கிராம சேவகர் பிரிவே காணப்படுகின்றது. இது பாரதூரமான அரசியல், உரிமை மீறலாகும்.

மேலும், 1948ஆம் ஆண்டு பிராஜா உரிமை பறிப்பு, 1949ஆம் ஆண்டின் தேர்தல் திருத்தச் சட்டம், 1958ஆம் ஆண்டின் சிங்கள மொழிச் சட்டம், 1952ஆம் ஆண்டின் நேரு – கொத்தலாவலை உடன்படிக்கை, 1964ஆம் ஆண்டின் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம், 1974ஆம் ஆண்டு சிறிமா – இந்திரா ஒப்பந்தம், 1987ஆம் ஆண்டின் ஜே.ஆர் – ரஜீவ் உடன்படிக்கை என்பனவும் பல இலட்சக்கணக்கான மலையகத் தமிழர்களின் அரசியல், குடியியல் உரிமைகளை மீறிய செயற்பாடுகளாகும்.
மலையகத் தமிழர்களின் காணியுரிமை, வீட்டுரிமை என்பன இன்றுவரை அங்கீகரிக்கப்படாமை, தொழில் உரிமைகள், பெண் தொழிலாளர் உரிமைகள், அவர்களின் பாதுகாப்பு, தொழில்சார் நலன்களின் பாதுகாப்பு என்பன மீறப்படுவதன் மூலம் அவர்களின் குடியியில் உரிமைகள் மீறப்படுகின்றன. ஏழு தலைமுறையாக நிரந்தர சம்பளம் ஒன்றைத் தீர்மானிக்கப்படாமை பாரதூரமான பொருளாதார உரிமை மீறலாகும்.

1958ஆம் ஆண் இனவெறி தாக்குதல், 1972 காணிச்சீர்திருத்தச் சட்டம், மலையக மக்களின் வாழ்வாதரம் அழிக்கப்பட்டமை, 1977, 1981, 1983, 1984, 1988ஆம் ஆண்டுகளில் மலையகத் தமிழருக்கெதிராக நிகழ்த்தப்பட்ட அரச ஆதரவுடன் கூடிய இனவெறி தாக்குதல்கள் கொலைகள், பாலியல் வல்லுறவுகள், சொத்து அபகரிப்புகள் மூலமாகவும் பாரிய மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டன.

கல்வி வாய்ப்புகளில் காட்டப்படும் பாரபட்சம், உயர்கல்வி மறுப்பு, சிறுவர்களை வேலைக்கமர்த்தல், சிறுவர் பாதுகாப்பின்மை, போசாக்கின்மை, வறுமை, என்பன மலையகத் தமிழருக்கெதிராக இன்று நிகழ்காலத்தில் நிலவும் மனித உரிமை மீறல்களாகும்.

சுகாதார, மருத்துவ நலன்களை வழங்குவதில் காட்டப்படும் பாரபட்சம், தாய் சேய் பாதுகாப்பு, பாராமரிப்பு, பாலியல் சுரண்டல்கள், குடும்ப சமூக அமைப்புசார் ஒடுக்கு முறைகள் என்பன 21ஆம் நூற்றாண்டின் அடிமைக்குழுமம் ஒன்றையே பிரதிபலிக்கின்றன எனலாம். இலங்கை மலையகத் தமிழரை பொறுத்தவரை அவர்களின் அரசியல் உரிமைகள், குடியியல் உரிமைகள், சிறுவர் உரிமைகள், பெண்கள் உரிமைகள், பொருளியல் உரிமைகள் என எந்நிலை நின்று நோக்கினாலும் அவையனைத்தும் வரலாறு பூராவும் மீறப்பட்டு வந்திருப்பதனையும், மீறப்பட்டு வருவதையும் காண முடிகின்றது.

இந்நிலைமை மேம்படுத்தும் எத்தகைய ஆக்கபூர்வமான பிரயத்தனமும் மேற்கொள்ளப்பட வில்லையென்பது வெட்கக்கேடான உண்மையாகும்.

பொன். பிரபாகரன்

நன்றி- மாற்றம் இணையம்